கேதார கவுரி விரதம் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேதார கவுரி விரதத்தையொட்டி பெண்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.;

Update: 2021-11-05 22:06 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேதார கவுரி விரதத்தையொட்டி பெண்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதம் என்பது தம்பதியர் பிரியாமல் அன்புடன் இறுதி வரை மகிழ்வுடன் வாழ பெண்கள் கடைபிடிக்கும் நோன்பாகும். கேதார கவுரி விரதத்தையொட்டி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதேபோன்று, சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், சந்திரமவுலீஸ்வரர் கோவில், ஜோதிவிநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பூசாரிப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
வழிபாடு
தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தை கொண்டு சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், 21 அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சாமியை வணங்கி பெண்கள் நோன்பை நிறைவு செய்தனர். 
இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்