தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் ரூ.20¾ கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் ரூ.20¾ கோடிக்கு மது விற்பனை நடந்தது.
சேலம்
டாஸ்மாக் கடைகளில் கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட அதிகமாக மது விற்பனை நடைபெறும் என்பதால் தேவையான மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக தீபாவளி அன்றும், தீபாவளிக்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக இருக்கும். சேலம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு தினமும் சராசரியாக ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறும்.
இந்தநிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை இருமடங்கு நடைபெற்றது. குறிப்பாக தீபாவளியன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் பெரும்பாலான மதுபிரியர்கள் காத்திருந்தனர். கடைகள் திறந்தவுடன் மதுபிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் வழக்கத்தைவிட அதிகமாக மது விற்பனை நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி வழங்கியதால், தீபாவளியன்று டாஸ்மாக் பார்களிலும் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ரூ.20¾ கோடிக்கு மது விற்பனை
அதேபோல், தீபாவளிக்கு முந்தைய நாளான 3-ந் தேதி இரவு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாக நடைபெற்றது. சரியாக இரவு 8 மணிக்கு கடைகள் அடைக்கப்படும் என்பதால் அதற்கு முன்பாகவே மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர்.
அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளான 3-ந் தேதி ரூ.9 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 110-க்கும், தீபாவளியன்று ரூ.10 கோடியே 96 லட்சத்து ஆயிரத்து 640-க்கும் மது விற்பனை நடைபெற்றது. கடந்த 2 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மூலம் ரூ.20 கோடியே 73 லட்சத்து 37 ஆயிரத்து 750-க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.