கோபி, சத்தி, நம்பியூர் பகுதியில் தொடர்மழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன; 8 பேர் உயிர் தப்பினர்
கோபி, சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் தொடர்மழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிறுவன், சிறுமி உள்பட 8 பேர் உயிர் தப்பினர்.
ஈரோடு
கோபி, சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் தொடர்மழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிறுவன், சிறுமி உள்பட 8 பேர் உயிர் தப்பினர்.
விடிய விடிய கனமழை
கோபி ரைஸ் மில் வீதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 65). சமையல் தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (53). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கோபி, மொடச்சூர், நல்லகவுண்டம்பாளையம், பொலவக்காளிபாளையம், கூகலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய கன மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
வீட்டின் சுவர் இடிந்தது
இந்த மழையால் நடராஜின் வீட்டின் சுவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த கணவன், மனைவி 2 பேரும் திடுக்கிட்டு எழுந்ததுடன், பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இதனால் அவர்கள் 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் ,இந்த மழையால் கோபியில் உள்ள தனியார் பள்ளிக்கூட சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதேபோல் கோபியில் இருந்து நாகர்பாளையம் செல்லும் ரோட்டில் மரம் ஒன்றும் அடியோடு சாய்ந்து விழுந்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் அருகே உள்ள காளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). சலவைத்தொழிலாளி. இவருடைய மனைவி ராதா (48). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் 4 பேரும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் பின் பகுதியில் உள்ள ஒரு அறையில் சென்று தூங்கினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சத்தியமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சுப்பிரமணியின் வீட்டின் முன் பகுதி இரவு 11 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் பின் பகுதியில் தூங்கி கொண்டிருந்தவர்கள் பதறி யடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது வீட்டின் முன் பகுதி இடிந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு சென்று தங்கினர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ சம்பவ இடத்துக்கு சென்று இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் வீடு இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று வீடு கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆய்வின் போது உக்கரம் ஊராட்சி தலைவர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பத்குமார், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஊமத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் ராம் கருணாநிதி, அரியப்பம்பாளையாம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நம்பியூர்
இதேபோல் நம்பியூரை அடுத்த ஆண்டிபாளையம் சாணார்புதூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பூவாள் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
இதில் பூவாள் மற்றும் அவருடைய கணவர் குப்பன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.