விக்கிரமசிங்கபுரம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் பனை மரங்களையும் சாய்த்தது
கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் பனை மரங்களையும் சாய்த்தது
விக்கிமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. பனை மரங்களையும் சாய்த்து சேதப்படுத்தியது.
காட்டு யானை அட்டகாசம்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பில் ஏராளமான விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று இரவில் அனவன்குடியிருப்பில் உள்ள முருகனுக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை, அங்கு பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்களை தின்று சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள பனை மரங்களையும் சாய்த்தது.
தென்னை மரங்கள் சேதம்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரத்தில் தலையணை செல்லும் வழியில் ஒரு தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று இரவில் அந்த தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை பிடுங்கி குருத்துகளை தின்று சேதப்படுத்தின. இதில் சுமார் 60 தென்னை மரங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். காட்டு யானை அட்டகாசத்தால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாதவாறு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர