ராதாபுரம் அருகே பயங்கரம்: தொழிலாளி வெட்டிக்கொலை உறவினர் கைது

தொழிலாளி வெட்டிக்கொலை;

Update: 2021-11-05 21:26 GMT
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
வெட்டுக்காயங்களுடன் பிணம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே மருதப்பபுரத்தில் இருந்து கால்கரை கிராமத்துக்கு செல்லும் சாலையோரம் நேற்று இரவில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ராதாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கூலி தொழிலாளி
விசாரணையில், இறந்து கிடந்தவர் ராதாபுரம் அருகே கும்பிளம்பாடு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சீனிகுமார் (வயது 45) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வள்ளியூர் கீழ தெருவில் வசித்து வந்தார்.
சீனிகுமாருக்கும், அவருடைய அண்ணனின் மைத்துனரான வள்ளியூர் கீழ தெருவைச் சேர்ந்த வாடகை கார் டிரைவரான சுடலையாண்டிக்கும் (50) இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சீனிகுமார் அடிக்கடி சுடலையாண்டியிடம் மது வாங்கி தருமாறு கூறி தகராறு செய்ததாகவும், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலையாண்டியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கைது
இந்த நிலையில் நேற்று இரவில் சுடலையாண்டி மது குடிக்க அழைத்து சென்று சீனிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுடலையாண்டியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சீனிக்குமார் கொலைக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாபுரம் அருகே தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்