தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-05 21:25 GMT
சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிக்கானப்பள்ளி  ஊராட்சி சத்யசாய் நகர் மேற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். 
-ஆனந்த், சத்யசாய் நகர், கிருஷ்ணகிரி.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள நவலை கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன், கலந்து மழைநீர் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. எனவே நவலை கிராமத்தில் நெடுஞ்சாலை துறை ரோட்டையொட்டி கம்பைநல்லூர்-மொரப்பூர் சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஊர்மக்கள், நவலை, தர்மபுரி.

சேலம் மெய்யனூர் பகுதியில் மழைநீர் வெளியேற போதிய  சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மழைநீர் வெளியேற சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மெய்யனூர், சேலம்.

பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீர் 
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் தரைத்தளம் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இங்குள்ள நேரக்காப்பாளர் அலுவலகம் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி தரைத்தளத்தை புதுப்பிப்பார்களா?
-லோகநாதன், பாப்பாரப்பட்டி.

நின்றுகொண்டு படிக்கும் நிலை
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள கிளை நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு இடவசதி இல்லை. இதனால் வாசகர்கள் நின்றுகொண்டும், நூலகம் முன்பு படிகளில் உட்கார்ந்துகொண்டும் படிக்கிற நிலை உள்ளது. எனவே வெண்ணந்தூர் நூலகத்துக்கு கூடுதலாக கட்டிடம் கட்டி வாசகர்கள் அமர்ந்து படிக்க வசதி ஏற்படுத்தப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?
-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
சேலம் இரும்பாலை குறிஞ்சி நகர் நுழைவுப்பகுதியில், சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் வேகத்தடைகள் இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வரதராஜன், குறிஞ்சி நகர், சேலம்.

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா ஆறகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் குப்பைகள், கழிவுபொருட்கள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது பற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது நல்லது.
-ஊர்மக்கள், ஆறகளூர், சேலம்.

சேறும், சகதியுமான சாலை 
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ந.புதுப்பட்டி பஞ்சாயத்து கிழக்கு வீதியில் சாலை சேறும்-சகதியுமாக பயன்படுத்த முடியாமல் மோசமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் மழை நீர் மற்றும் வீட்டு கழிவுநீர் அனைத்தும் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.பிரபாகரன், ந.புதுப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்