கோபி அருகே பரபரப்பு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 41 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை

கோபி அருகே வீட்டின் கதவை உடைத்து 41 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.;

Update: 2021-11-05 21:24 GMT
கடத்தூர்
கோபி அருகே வீட்டின் கதவை உடைத்து 41 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று உள்ளனர். 
டாக்டர்
கோபி பாலிக்காடு சகுந்தலா செங்கோட்டையன் வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 70). டாக்டர். இவர் கோபியில் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருகிறார். 
தீபாவளி பண்டிகையை கொண்டாட கோவையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு ரவீந்திரன் தனது மனைவி மற்றும் தாயாருடன் சென்றுவிட்டார். அங்கு தீபாவளியை கொண்டாடிவிட்டு மீண்டும் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்து உள்ளார். 
கதவு உடைக்கப்பட்டு...
அப்போது வீட்டின் முன்புற இரும்பு கிரில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் வீட்டின் முன்புற கதவை திறந்து பார்த்தார். ஆனால் திறக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் சமையல் அறை கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு பதற்றம் அடைந்தார். உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நெக்லஸ், தங்க சங்கிலி, வளையல் உள்பட 41 பவுன் நகைகளை காணவில்லை. 
41 பவுன் நகை கொள்ளை
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமாக சென்று அங்குள்ள சமையல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்புற கதவை உள்பக்கமாக தாழ்போட்டு விட்டு, ஒவ்வொரு அறையாக சென்று உள்ளனர். இதையடுத்து வீட்டின் மேல்மாடிக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 41 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. 
உடனே ரவீந்திரன் இதுகுறித்து கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதுபற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நகைகள் கொள்ளை போன வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. மோப்ப நாய் வீரா மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். 
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்