8-ந் தேதி தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அண்ணாமலை பேட்டி
8-ந் தேதி தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அண்ணாமலை பேட்டியின் போது கூறினார்
ஸ்ரீரங்கம்
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆதிசங்கரர் சமாதி மற்றும் அந்த இடத்தில் ஆதி சங்கரருக்கு கட்டப்பட்ட சுமார் 12 அடி உயரம் கொண்ட சிலை ஆகியவற்றை பிரதமர் நரேந்திரமோடி நேற்று திறந்து வைத்து உரையாற்றினார். இதனையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கேதார்நாத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழா நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் தாயார் சன்னதி எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரையில் திரையிடப்பட்டது. இதனை அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.யினர் பார்த்தனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
பின்னர், அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடிக்கு சென்றால் தான் நமக்கு 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். ஆனால், தற்போது 137 அடியாக இருக்கும் போதே திறக்கப்பட்டுள்ளது. இதனால், தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரிய துரோகத்தை தமிழக அரசு இழைத்துள்ளது. முல்லை பெரியாறு அணை தமிழக கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கேரள அமைச்சரும், அதிகாரிகளும் ஷட்டரை திறந்துள்ளனர். அணையை திறக்கும் போது தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஏன் போகவில்லை? என்று தெரியவில்லை.எனவே, மாநில அரசின் உரிமையை மீட்டெடுக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும், தமிழக அரசின் இந்த செயலை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) தேனி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.246 கோடியே 13 லட்சத்திற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலை விசாரிக்க வேண்டிய தமிழக அரசு சாக்கு, போக்கு சொல்லி இதுவரை ரூ.1 கோடியே 85 லட்சத்தை மட்டும் மீட்டிருக்கிறது.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் கூட குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படவில்லை. ஆனால், மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என தமிழக அரசு கூறுவது முற்றிலும் தவறானது.
வழிபாட்டு தலங்கள்
வைகுண்ட ஏகாதசி உள்பட அனைத்து திருவிழாக்களிலும் முழுமையாக அனைத்து கோவில்களையும் திறந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல மற்ற மதவழிப்பாட்டு தலங்களையும் முழுமையாக திறக்க வேண்டும். அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை தி.மு.க.வினர் சொன்னால் மட்டுமே அதிகாரிகள் வாங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நாட்களை அதிகப்படுத்த வேண்டும். தகுதி உள்ளவர்களை அறங்காவலராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் ராஜேஷ், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன், பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.இதேபோல திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி தேசிய செயற்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.