நம்பியூர் பகுதியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது; 60 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; டி.வி.- கிரைண்டர் நீரில் மூழ்கி சேதம்
நம்பியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 60 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகளுக்குள் இருந்த வாசிங் மெசின், கிரைண்டர், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் நீரில் மூழ்கி சேதம் ஆனது.
நம்பியூர்
நம்பியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 60 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகளுக்குள் இருந்த வாசிங் மெசின், கிரைண்டர், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் நீரில் மூழ்கி சேதம் ஆனது.
விடிய விடிய மழை
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி ராஜீவ் காந்தி நகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நம்பியூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நம்பியூர் ராஜீவ்காந்தி நகருக்கு அருகில் உள்ள குளங்கள் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய நேற்று காலை வரைநீடித்தது.
வெள்ளம் புகுந்தது
இதனால் ராஜீவ்காந்தி நகருக்கு அருகே உள்ள குளங்களில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. மேலும் மழைநீரும் குளத்து தண்ணீருடன் கலந்ததால் வெள்ளம் கரைபுரண்டு ராஜீவ்காந்தி நகருக்குள் புகுந்தது. நள்ளிரவில் திடீரென குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மீட்பு
இதற்கிடையே இதுகுறித்த தகவல் நம்பியூர் தாசில்தார் மாரிமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருடன் விரைந்து சென்றார்.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்குள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த டி.வி., வாசிங் மெசின், கிரைண்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இந்த மழையால் நம்பியூர் அருகே உள்ள கோசனம், எம்மாம்பூண்டி, திட்டமலை, செல்லிபாளையம், பொத்தபாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. கே.மேட்டுப்பாளையம், நடுப்பாளையம், மூணாம்பள்ளி பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி கரட்டுப்பாளையம்- கோரமடை செல்லும் ரோட்டில் அதிக அளவில் சென்றது.
தரைமட்ட பாலத்தின் ஒரு பகுதி...
மேலும் புலவர் கருக்குப்பாளையத்தில் உள்ள 23 ஏக்கர் பரப்பளவிலான குளம், வாகைமடை குளம் ஆகிய குளங்களும் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. நம்பியூர் அருகே உள்ள செட்டிபதி குளத்தின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து உள்ளது. இதனால் அந்த குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி, தணிகை நகர் பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தின் ஒரு பகுதியை மழை வெள்ளம் அடித்து சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியில் நீரிடி விழுந்ததில் பூமியில் பள்ளம் ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சாியத்துடன் பார்த்து சென்றனர்.
ஆய்வு
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தேவையான உதவிகளையும் செய்தார். இதில் நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நம்பியூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் அதன் பொறுப்பாளர் மெடிக்கல் ப.செந்தில்குார், பாதிக்கப்பட்ட பொதுமக்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு உணவு, சமையல் பாத்திரங்கள், மாற்று உடைகள் ஆகியவற்றை வழங்கினார்.
இதுகுறித்து தாசில்தார் மாரிமுத்து கூறுகையில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன,’ என்றார்.
மேலும் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வெள்ளம் புகுந்த வீடுகளை நம்பியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ரவிசங்கர், நிலவருவாய் ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், முருகேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நம்பியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மட்டும் 84 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபி
இதேபோல் கோபி அருகே உள்ள கடுக்காம்பாளையம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள சி.எஸ்.ஐ. தெருவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் வெள்ளம் வடிந்ததும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 2 மணி முதல் 3 மணி வரை கனமழை பெய்தது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்லாம்பட்டி, சந்திராபுரம் உள்பட நீர் போக்கிகள் உள்ள பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கீழ்பவானி பாசன பகுதிகளில் உள்ள பள்ளங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மேலும் ஓடைப்பள்ளங்களில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில் கழிவுகள் அடைத்து கொண்டதால் மழை நீர் பாலத்தின் மேல் சென்றது. இதுபற்றி அறிந்ததும் உள்ளாட்சி பணியாளர்கள் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுகளை அகற்றினர். மேலும் இடி-மின்னல் காரணமாக கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி. உள்ளிட்டவை பழுதானது.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி -110, குண்டேரிப்பள்ளம் -102, நம்பியூர் -84, எலந்தைகுட்டை மேடு -81.6, அம்மாபேட்டை -66.4, கவுந்தப்பாடி -46.2, கொடிவேரி -42, வரட்டுப்பள்ளம் -41, சத்தியமங்கலம்-35, பவானி -32, பெருந்துறை -15, தாளவாடி -12, பவானிசாகர் -7.8, சென்னிமலை -2. மாவட்டம் முழுவதும் 677 மில்லி மீட்டர் மழை அளவும், சராசரியாக 39.82 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.