ராமநதி அணை நிரம்பியது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
ராமநதி அணை நிரம்பியது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கடையம்;
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டியது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை இல்லை. வெயில் அடித்தது. அவ்வப்போது மழை பெய்வது போல் மேகங்கள் கூடினாலும் வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்தது.
மழை குறைந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்கனவே பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளது.
கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு பாய்ந்தோடுகிறது. மேலும் குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்து செல்கிறது. இதனால் ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் ஒரு சிலர் ஆற்றங்கரையோர பகுதியில் குளித்து செல்கிறார்கள்.
அணைகள்
நெல்லை மாவட்டத்தில் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 136.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,505 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,368 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டமும் 140.62 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 624 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கனஅடியாகவும் உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 21 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 325 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
கருப்பாநதி அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை அவ்வப்போது நிரம்பி வழிகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 30 கன அடியாகவும், வெளியேற்றம் 45 கன அடியாகவும் உள்ளது.
ராமநதி அணை நிரம்பியது
இதுதவிர தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே உள்ள ராமநதி அணை நேற்று நிரம்பியது. 84 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியை எட்டி, நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய உபரி நீரானது முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அதாவது அணையின் முக்கிய 2 மதகுகள் வழியாக அணைக்கு வரக்கூடிய 60 கனஅடி நீர் அப்படியே முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் கடையம் கடனாநதி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
குற்றாலத்தில் வெள்ளம் குறைந்தது
தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மழை இல்லை. வெயில் அடித்தது. மதியம் சாரல் மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்துள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் விழுகிறது.
இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்களின் பாகங்கள் அருவிக்கரையில் சிதறிக் கிடக்கின்றன. பெண்கள் உடை மாற்றும் அறையில் சுவர் சேதம் அடைந்து உள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சேர்வலாறு -7, மணிமுத்தாறு-5, கொடுமுடியாறு -10, கடனாநதி -15, ராமநதி -20, கருப்பாநதி -43, குண்டாறு-16, அடவிநயினார் -12, ஆய்க்குடி -6, செங்கோட்டை -5, தென்காசி-7, சிவகிரி -12.