2 நாட்களில் ரூ.8.25 கோடிக்கு மது விற்பனை
2 நாட்களில் ரூ.8.25 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
அரியலூர்:
மது விற்பனை
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும். மதுப்பிரியர்கள் போட்டிபோட்டு மதுபானங்களை கூடுதலாக வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 89 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த புதன்கிழமையன்று பலத்த மழை பெய்தாலும், மதுப்பிரியர்கள் தாங்கள் விரும்பி அருந்தும் மதுபானங்களை வழக்கத்திற்கு அதிகமாக வாங்கி சென்றனர். மேலும் நேற்று முன்தினமும் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
ரூ.8.25 கோடிக்கு...
தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு பீர், ஒயின் மற்றும் மதுபானங்கள் விற்பனை ஆனது. தீபாவளியான நேற்று முன்தினம் ரூ.4 கோடியே 50 லட்சம் அளவிற்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி 2 நாட்களில் மொத்தம் ரூ.8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.