ரூ.58 லட்சம் மோசடி செய்தவர் கைது
ரூ.58 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கல்பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அரியலூரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு அரசு வேலை தேடி வந்தார்.
இதனை அறிந்த அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வேலை பார்க்கும் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நெட்டவெலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், சோமசுந்தரத்திடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் இருந்து ரூ.58 லட்சத்து 28 ஆயிரத்து 500 வாங்கியதாகவும், பின்னர் வேலை வாங்கித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து சோமசுந்தரம் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை தேடிவந்தனர். இந்நிலையில் அவர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.