பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மீன்சுருட்டி:
தொடர் விடுமுறை
கொரோனா தொற்று பரவல் குறைந்ததாலும், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் தீபாவளி பண்டிகையானது நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முந்தையநாள் மழையின் காரணமாக விடுமுறை விடப்பட்டதுடன், நேற்றும் விடுமுறை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
இதேபோல் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவிலின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைகளை பார்த்து வியந்தனர். கோவில் வளாகத்திலும், புல்வெளியிலும் அமர்ந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். ஏராளமானவர்கள் குவிந்ததால் கோவிலில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.