வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
மண்ணச்சநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சமயபுரம்
மண்ணச்சநல்லூர்-சமயபுரம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கோபால் (வயது 64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரும், இவரது மனைவி வசந்தியும்(60) கடந்த 27-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
கடந்த 3-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு கோபால் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கை ரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.