தஞ்சையில் இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகை நாளில் அமாவாசை வந்ததால் தஞ்சையில் இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் குவிந்தனர்.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகை நாளில் அமாவாசை வந்ததால் தஞ்சையில் இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் குவிந்தனர்.
அமாவாசையில் தீபாவளி
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சாப்பிட்டு மகிழ்வர். மேலும் அன்று இறைச்சி வாங்கி சமைத்தும் சாப்பிடுவது வழக்கம். இதனால் அன்று ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அமாவாசை நாளில் வந்தது. இதனால் பெரும்பாலானோர் இறைச்சி வாங்குவதை தவிர்த்தனர். சைவ உணவுகளையே தீபாவளி தினத்தன்றும் சாப்பிட்டனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இறைச்சி கடைகளில் கூட்டம்
தஞ்சை கீழவாசல் மீன்மார்க்கெட், பர்மா காலனி மீன்மார்க்கெட் மற்றும் கோழி இறைச்சி கடைகள், ஆட்டு இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. வழக்கமாக கிலோ ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்ட ஆட்டு இறைச்சி நேற்று ரூ.800-க்கும், கோழி இறைச்சி ரூ.130 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் முட்டைகளும் அதிகஅளவில் வாங்கி சென்றனர்.
இதேபோல் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும் நேற்று இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.