தஞ்சை மாநகரில் ஒரே நாளில் 300 டன் குப்பைகள் அகற்றம்

தஞ்சை மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. ஒரே நாளில் மட்டும் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை அள்ளும் பணியில் லாரி, சரக்கு ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.

Update: 2021-11-05 20:15 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. ஒரே நாளில் மட்டும் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை அள்ளும் பணியில் லாரி, சரக்கு ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகரில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளப்பட்டு ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொண்டு கொட்டப்படுவது வழக்கம். இந்த வார்டுகளில் தினமும் 105 முதல் 115 டன் வரை குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 600 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தஞ்சை காந்திஜி சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, பழைய பஸ் நிலைய பகுதி, அண்ணாசிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழ அலங்கம், தெற்கு வீதி, கீழராஜவீதி, திலகர் திடல் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தேங்கிய குப்பைகள்
மேலும் தரைக்கடைகளும் வழக்கத்தை விட அதிக அளவில் போடப்பட்டன. இதனால் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்றது. இந்த கடைகள் அகற்றப்பட்ட பின்னர் குப்பைகளும் ஆங்காங்கே தேங்கிக்கிடந்தன. கடைவீதிகளின் அனைத்து பகுதிகளிலும், முக்கிய வீதிகளிலும் வழக்கத்தை விட குப்பைகள் அதிகமாக காணப்பட்டன.
தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி நாளிலும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசுக் குப்பைகளும் சேர்ந்ததால், 2 நாட்களில் குப்பைகள் அதிகமாகின. எனவே, அரசு விடுமுறை நாளான நேற்று அதிகாலை 4.30 மணி முதல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஏறக்குறைய 550 பேர் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
300 டன் குப்பைகள் அகற்றம்
இந்த தூய்மை பணியில் சரக்கு ஆட்டோக்கள், மினி லாரிகள், லாரிகள் என 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ 300 டன்கள் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஒரே நாளில் 2 மடங்குக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்