கடலூர் மாவட்டத்தில் 13 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த பா.ம.க.வினர் 23 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் 13 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த பா.ம.க.வினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-05 19:11 GMT
கடலூர், 

தமிழக அரசு வன்னியர்களுக்காக 10.5 சதவீத இடஒதுக்கீடு செய்து பிறப்பித்த அரசாணையை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கண்ணாடிகள் உடைப்பு

கடலூர் மாவட்டத்தில் பெரியகுமட்டி பஸ் நிறுத்தம், வடலூர் நெய்சர் பஸ் நிறுத்தம், சின்ன கண்டியாங்குப்பம் ரெயில்வே கேட், விருத்தாசலம் பஸ் நிலையம், வயலூர் மேம்பாலம், சின்ன கொசப்பள்ளம் பஸ் நிலையம், பாலக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம், ஒறையூர் பஸ் நிலையம், திருமாணிக்குழி பாலம், பல்லவராயநத்தம் பஸ் நிலையம், கொடுக்கம்பாளையம் பள்ளி அருகில், அன்னகாரங்குப்பம் பாலம், சங்கொலிக்குப்பம் பஸ் நிலையம் ஆகிய 13 இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து, பொது சொத்துகளை சேதப்படுத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினர்.

23 பேர் கைது

இதையடுத்து பஸ் கண்ணாடிகளை உடைத்த, பா.ம.க. கிளை செயலாளர் சிவராமன் (வயது 40), ஒன்றிய செயலாளர் மோகனசுந்தரம் (30), ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த நகர துணை தலைவர் மதியழகன் (31), வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் பிரபு (35), விருத்தாசலம் நகர செயலாளர் விஜயகுமார் (40), மாளிகை கோட்டம் முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜசேகர் (30), ஒறையூரை சேர்ந்த மாவட்ட துணை தலைவர் குணசேகரன் (64), உறுப்பினர்கள் ராமு (21), மணிகண்டன் (48), சுந்தரவாண்டியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் பாலாஜி (37), மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள் (38), பல்லவராயநத்தம் ஒன்றிய அமைப்பு செயலாளர் ரத்தினவேல் (45), நிர்வாகிகள் முத்துக்குமரன் (37), மூர்த்தி (44), அருள்ஜோதி (29), சேது (22), தட்சிணாமூர்த்தி (42), ராஜசேகர் (33), நந்தகுமார் (22), சியான் என்கிற ஸ்ரீதர் (38), அருள்முருகன் (29), சுரேஷ் (27), வெங்கடேசன் என்கிற அய்யனார் (19) ஆகிய 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்