வாலிபர்களை தாக்கிய 7 பேர் கைது
வாலிபர்களை தாக்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள மருதூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). இவர் தனது அண்ணன் வருண்குமாருடன் தீபாவளி ஜவுளி எடுக்க மருதூரிலிருந்து குளித்தலைக்கு மோட்டார்சைக்கிளில் சம்பவத்தன்று சென்று கொண்டிருந்தார். குளித்தலை பெரியபாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த குளித்தலை மலையப்பநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (19), ஜீவானந்தம் (19), மனோஜ்குமார் (19) ஆகிய 3 பேரும் அருண்குமார் மற்றும் வருண்குமாரிடம் தகராறு செய்து அவர்களை திட்டி தாக்கி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபிரசாத், ஜீவானந்தம், மனோஜ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் குளித்தலை வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்ராம் (23). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் கார்த்திக்ராஜுடன் குளித்தலை உழவர் சந்தை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குளித்தலை பகுதியைச் சேர்ந்த அம்பேத்கார் (26), கார்த்திக் (26), ராஜமாணிக்கம் (21), சஞ்சய் (18) ஆகியோர் அரவிந்த்ராமிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து கேட்ட கார்த்திக்ராஜையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்த்ராமின் மற்றொரு நண்பரான லெனின்ராஜ் தனது நண்பர்களை எதற்காக அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அரவிந்த்ராம் அளித்த புகாரின் பேரில் அம்பேத்கர், கார்த்திக், ராஜமாணிக்கம், சஞ்சய், ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.