பிச்சைக்காரர் கழுத்தறுத்து படுகொலை
காட்பாடியில் பஸ் நிழற்குடையில் யார் தங்குவது என்ற போட்டியில் பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
காட்பாடி
காட்பாடியில் பஸ் நிழற்குடையில் யார் தங்குவது என்ற போட்டியில் பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
பிச்சைக்காரர்கள் மோதல்
காட்பாடி போலீஸ் நிலையம் அருகில் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை உள்ள இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. சிறிது தூரம் தள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாகாயம் செல்லும் டவுன் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இதனால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள நிழற்குடையில் பிச்சைக்காரர்கள் தங்கியிருந்தனர். இன்று மாலை 2 பிச்சைக்காரர்கள் அங்கு இருந்தனர். இரவில் அங்கு யார் தங்குவது என்ற போட்டியில் சண்டையிட்டு உள்ளதாக தெரிகிறது.
கழுத்தறுத்து கொலை
இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரரை கத்தியால் தலையில் தாக்கி உள்ளார். பின்னர் அவரின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிச்சைக்காரர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையம் அருகிலேயே பிச்சைக்காரர்கள் மோதலில் ஈடுபட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.