கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பேரணாம்பட்டு அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கக் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-11-05 17:55 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கக் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவிலை திறந்து பூஜை

பேரணாம்பட்டை அடுத்த எம்.வி. குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. 

கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாயவேல்  தரப்பினருக்கும், கிராம மக்கள் தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் மாயவேல் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் அனுமதி ெபற்று, தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 8 வரை கோவிலை திறந்து பூஜை செய்து வருவதாக, கூறப்படுகிறது.

வாக்கு வாதம்

இந்தநிலையில் நேற்று தீபாவளி அன்று இரவு 7.45 மணியளவில் நாட்டாண்மை சிவக்குமார் தலைமையில் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் சந்தியா உள்பட கிராம மக்கள் 100-க்கு மேற்பட்டோர் திரண்டு வந்து கோவில் திருவிழா நடத்துவதற்காக காப்புக்கட்டி சாட்டு வைப்பதற்காக கோவில் அருகில் சென்று, கோவிலை திறக்கும்படி கூறினர். 

ஆனால் மாயவேல் தரப்பினர் முன்கூட்டிேய கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டதாக, கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திரண்டு மாயவேல் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜன்பாபு (பேரணாம்பட்டு), சுப்பிரமணி (லத்தேரி), கணபதி (குடியாத்தம் தாலுகா) மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் கிராம மக்கள், கோவிலை திறந்து திருவிழா நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும், எனக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உடனே குடியாத்தம் சப்-கலெக்டர் தனஞ்செயனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், கிராம மக்கள், அதிகாரிகள் கூறியதை ஏற்காமல் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இதையடுத்து மேல்பட்டி போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.வி. குப்பம் கிராம நாட்டாண்மை சிவக்குமார் (வயது 56), ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் சந்தியா (35), காமராஜ் (38), அரவிந்தன் (27), வினோத் (30), மதன் (35), முரளி (25) உள்பட மொத்தம் 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்