‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2021-11-05 17:42 GMT
தேங்கும் மழைநீரால் கொசுத்தொல்லை

ஆண்டிப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு திருவள்ளுவர் காலனியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. எனவே மழைநீர் தேங்கி நிற்காத வகையில் அருகில் உள்ள பெரிய கால்வாயில் சேருவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? 
-சென்றாயபெருமாள், சக்கம்பட்டி.

சுகாதாரக்கேடு அபாயம்
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் கழிப்பறைக்கு செல்லும் பாதையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-அன்புசெல்வன், வீரபாண்டி.

சாலையில் மழைநீர் குளம் 
திண்டுக்கல்-திருச்சி சாலையில் காந்திஜிநகர் பகுதியில் ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் மழைநீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. சாலையில் இருபக்கங்களிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை மழைநீரில் தத்தளித்தபடி செல்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மழை நீர் தேங்காமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-மகாலட்சுமி, திண்டுக்கல்

மயான வசதி தேவை
ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி ஊராட்சி கீழமஞ்சிநாயக்கன்பட்டியில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கு மயான வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை சாலை ஓரத்தில் அடக்கம் செய்யும் நிலை உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் அதுவும் இல்லாமல் போய்விடும். எனவே மயான வசதி செய்து தரவேண்டும். 
-திலீப்குமார், ராஜதானி.

மேலும் செய்திகள்