அரசு வேலை வாங்கி தருவதாக ரூ5 கோடி மோசடி
அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ5 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான ஊராட்சி மன்ற தலைவரை தேடி வருகின்றனர்.
வேலூர்
அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ5 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான ஊராட்சி மன்ற தலைவரை தேடி வருகின்றனர்.
அரசு வேலை
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (வயது 45). இவர் தமிழக காவல்துறையில் பிகிலர், வனத்துறையில் வனவர், நீதிமன்றங்களில் உதவியாளர் ஆகிய அரசு பணிகளை வாங்கி தருவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் விருபாட்சிபுரம், வேலப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
ஒவ்வொருவரிடமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை என ெமாத்தம் சுமார் ரூ.5 கோடி அவர் பெற்றுள்ளார். அவருக்கு தச்சன்பட்டறை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (31), வேலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரரான பிகிலர் வேலை பார்த்த தங்கராஜ் (70) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர்களிடம் பணம் பெற்று அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை போலியாக தயாரித்து அதில், ஒரு குறிப்பிட்ட தேதியும் இடத்தையும் குறிப்பிட்டு பணியில் சேர வேண்டும் என்று கொடுத்துள்ளனர்.
பின்னர் அவர்களே குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொரோனா தொற்று மற்றும் சட்டமன்ற தேர்தலை காரணமாக காட்டி இப்போது பணியில் சேர முடியாது. விரைவில் மற்றொரு தேதி அறிவித்து ஆணை அனுப்பி வைக்கப்படும் என்று கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தெரிவித்தப்படி வேலை கொடுக்காமல் தொடர்ந்து ஏதாவது காரணத்தை கூறி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் ஏற்பட்டு பணத்தை திருப்பி கொடுக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த குமரேசன் உள்பட 3 பேரும் பணம் கொடுக்க முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
வலைவீச்சு
இந்த நிலையில் வேலூர் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்த யுவநாதன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டவர்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
அப்போது, போலியாக பணி நியமன ஆணை கொடுத்து பணத்தை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், சதீஷ், தங்கராஜ் ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான குமரேசனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குமரேசனுக்கு தங்கராஜ் உடந்தையாக இருந்துள்ளார். மேலும் காவல்துறையில் பணியில் சேர பணம் கொடுத்த இளைஞர்களுக்கு அதற்கான பயிற்சிகள் வழங்கி உள்ளார் என்றனர். பல்வேறு அரசு துறைகளில் பணி நியமன ஆணை கொடுத்த பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.