சங்கராபுரம் ஓட்டலில் வாங்கிய உணவில் பல்லி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு மயக்கம்
அதிகாாிகள் ஆய்வு;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன். இவர் நேற்று மதியம் சங்கராபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் எலுமிச்சை சாதம் 3 பார்சல்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனது மகன், மகளுடன் அமர்ந்து பார்சல்களை பிரித்து எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பார்சலில் பல்லி ஒன்று செத்த நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவத்தை அறிந்த சங்கராபுரம் தாசில்தார்(பொறுப்பு) இந்திரா, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு உடனடியாக விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், பார்சல் உணவில் பல்லி கிடந்த சம்பவத்தை உரிமையாளரிடம் கூறி ஓட்டலை ஆய்வு செய்ததோடு, எலுமிச்சை சாதத்தை கைப்பற்றி கீழே கொட்டினர். ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், வருவாய் ஆய்வாளர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.