தீபாவளி கொண்டாட மாமனார் வீட்டுக்கு வந்தபோது சோகம்: வராகநதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டிரைவர் பிணமாக மீட்பு
தீபாவளி கொண்டாட மாமியார் வீட்டுக்கு வந்த போது, வராகநதி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார்.
மேல்மலையனூர்,
சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வள்ளி. கடந்த 2-ந்தேதி தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் உள்ள தன் மாமனார் வீட்டிற்கு தீபாவளி கொண்டாடுவதற்காக வந்துள்ளார்.
மாலையில் அங்குள்ள சிறுவாடி வராக நதி செல்லும் தரைப் பாலம் அருகே சிவக்குமார் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றதால், அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
35 வீரர்கள் தேடினர்
இதுபற்றி அறிந்த மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. கடந்த 3-ந் தேதி அமைச்சர் செஞ்சி மஸ்தான், தாசில்தார் நெகருன்னிசா ஆகியோர் அங்கு சென்று, மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
தொடர்ந்து அவர் கிடைக்காத நிலையில், நேற்று 4-வது நாளாக சிவக்குமாரை தேடும் பணி நடைபெற்றது. இதில் மேல்மலையனூர், செஞ்சி ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 35 வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பிணமாக மீட்பு
அப்போது, அவர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிவக்குமார் முட்புதரில் சிக்கிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து அவரது உடலை வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் சிவக்குமார் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.