மத்திய சமையல் கூடத்தில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு
வருகிற 8-ந்தேதி பள்ளிகள் திறப்பினையொட்டி மத்திய சமையல் கூடத்தில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி, நவ.5-
வருகிற 8-ந்தேதி பள்ளிகள் திறப்பினையொட்டி மத்திய சமையல் கூடத்தில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார்.
நவீன சமையல் கூடம்
புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதிய உணவு தயாரிக்கப்படும் லாஸ்பேட்டையில் உள்ள மத்திய சமையல் கூடம் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆய்வு
இந்த மைய சமையல் கூடத்தில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு சமைக்க செய்யப்பட்டுள்ள வசதிகளை அவர் பார்வையிட்டார். அங்கு மாதிரிக்கு தயார் செய்யப்பட்ட உணவினையும் அவர் ருசித்து பார்த்தார். இந்த ஆய்வின்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
உணவு தயாரிக்கும் பணி முழுக்க முழுக்க மின்சாதன பொருட்கள் மூலம் நடைபெறும் நிலையில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அது வரை ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்றுமாறு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.
ஆய்வினை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதிய உணவு
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் வருகிற 8-ந்தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அக்ஷய பாத்திரம் என்ற அமைப்பு மதிய உணவு வழங்க முன்வந்தது. அதற்கான பணிகள் முடிவடையாததால் 8-ந்தேதி முதல் புதுவை அரசின் மதிய உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்படும்.
மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கிட அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் சிறப்பு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காலை உணவு திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வகுப்பறைகள் தயார்
அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
____