கந்துவட்டி பிரச்சினையால் கைக்குழந்தையுடன் தம்பதி தற்கொலை முயற்சி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கந்து வட்டி கொடுமையால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு, கைக்குழந்தையுடன் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-11-05 16:55 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் வண்டிமேடு ஆபேஷா தக்கா தெருவை சேர்ந்த முகமதுஅலிஜின்னா (வயது 31) என்பவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் ஒரு வயதுடைய கைக்குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு வந்தார். 

திடீரென அவர் , தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தன் மீதும், மனைவி, குழந்தை மீதும் ஊற்ற முயன்றார். இதைபார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜ், தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று முகமதுஅலிஜின்னாவை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பறித்தனர் னர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கந்துவட்டி பிரச்சினை

அப்போது அவர் கூறுகையில், நான் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையில் வசித்து வரும் ஆயுதப்படை போலீஸ்காரர் பாலாஜி மற்றும் சந்துரு ஆகியோரிடம் தொழில் விஷயமாக ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்தேன். கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் வட்டியை செலுத்த முடியவில்லை.

 அதன் பிறகு வாங்கிய தொகைக்கு வட்டியும், அசலும் கொடுத்து விட்டேன். நான் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னை டாக்டர்கள், வேலைக்கு ஏதும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதால் தற்போது வருமானமின்றி பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளேன்.

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் எனது காரின் பின்பக்க டயர்களை கழற்றி எடுத்துச்சென்றுள்ளதோடு ரூ.15 லட்சம் கொடுத்துவிட்டு கார் டயரை எடுத்துசெல்லும்படி கூறியும் இல்லையெனில் குடும்பத்தோடு கொன்று விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர், எனவே வாங்கிய கடன் தொகை ரூ.3 லட்சத்துக்கு ரூ.15 லட்சம் தரும்படி கந்துவட்டி கேட்டு மிரட்டி வரும் அவர்கள் இருவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று முகமதுஅலிஜின்னாவை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முகமதுஅலிஜின்னா, அவரது மனைவி அனுசுயாபேகம் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..

மேலும் செய்திகள்