தலையில் கல்லை போட்டு வியாபாரி கொலை
ஆரணியில் முன்விேராதம் காரணமாக தலையில் கல்லை போட்டு வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடா்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி
ஆரணியில் முன்விேராதம் காரணமாக தலையில் கல்லை போட்டு வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடா்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.
காய்கறி வியாபாரி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் போத்து என்ற மணிகண்டன் (வயது 26). காஞ்சீபுரத்தில் தந்தை பன்னீர்செல்வம், தாய் ராதா ஆகியோருடன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊரான ஆரணிக்கு மணிகண்டன் வந்தார். அங்கு அவரது அண்ணன் வீட்டில் தங்கினார்.
நேற்று இரவு 10 மணி அளவில் தர்மராஜா கோவில் தெருவில் இருந்து சாந்தா தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவருடன் சிறுவயதிலிருந்து பழகி வந்த கரிமா என்ற விக்னேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக ஏண்டா என்னிடம் பேச மாட்டாயா? என்று குரல் கொடுத்துள்ளார். மேலும் அவருடன் இருந்த மனோஜ் என்பவர் மணிகண்டனை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியுள்ளார்.
தலையில் கல்லைப்போட்டனர்
அப்போது விக்னேஷ் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். மேலும் அங்கு வந்த சிறுவயது நண்பரும் தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகியுமான கார்த்தி மற்றும் மணு ஆகியோர் அருகில் இருந்த செங்கற்களை எடுத்து மணிகண்டன் தலை மீது ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக சென்ற பார்த்திபன், சங்கர், சேகர், செல்வராஜ் ஆகியோர் விலக்கிவிட முயன்றனர். ஆனால் விக்னேஷ் அருகில் இருந்த பெரிய கற்களை எடுத்து மீண்டும் மணிகண்டன் மீது ேபாட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அண்ணி ஸ்ரீலேகா மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
3 பேர் கைது
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள், தருமன், ரகு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் விக்னேஷ், மனோஜ், மணு ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான வக்கீல் கார்த்தியை தேடி வருகின்றனர்.