முல்லைப்பெரியாறு அணை நிர்வாகத்தை தேனி கலெக்டர் பொறுப்பில் கொண்டுவர வேண்டும் அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் மனு
முல்லைப்பெரியாறு அணை நிர்வாகத்தை தேனி கலெக்டர் பொறுப்பில் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கம்பம்:
தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட அமைச்சர் துரைமுருகன் நேற்று கம்பம் வழியாக வந்தார். அப்போது கம்பத்தில் கூடலூர் நெடுஞ்சாலையில் தனியார் விடுதி முன்பு 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் விவசாயிகள் அமைச்சரை முற்றுகையிடப் போவதாக உத்தமபாளையம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தாவிற்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளை கலைந்து செல்லுங்கள், மறியல் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது முற்றுகை போராட்டம் நடத்த போவதில்லை, அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இது குறித்து அமைச்சருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் அமைச்சர் காரில் அந்த வழியாக வந்தார். அப்போது அமைச்சர் தனது காரை நிறுத்தி விவசாய சங்கத்தினரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டார்.
அந்த மனுவில் முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், அணையில் தமிழக போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும், அணை நிர்வாகம் தேனி மாவட்ட கலெக்டர் பொறுப்பில் வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகளை கெடுபிடி செய்யாமல் வல்லக்கடவு வழியாக அனுப்ப வேண்டும், நீண்ட காலம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் தமிழன்னை படகிற்கு கேரள அரசிடம் அனுமதி பெறவேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுகொண்ட அமைச்சர், கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.