தனபாலுக்கு மேலும் ஒருநாள் போலீஸ் காவல்
தனபாலுக்கு மேலும் ஒருநாள் போலீஸ் காவல்
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் வழக்கில் தடயங்களை அழித்ததாக விபத்தில் இறந்த ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 1-ந் தேதி தனபால், 2-ந் தேதி ரமேஷ் என அவர்களை தனித்தனியாக 5 நாள் காவலில் எடுத்து சோலூர்மட்டம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 5 நாள் காவல் முடிவடைந்ததால் தனபாலை நேற்று மாலை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தனபாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. அதன்படி ஒருநாள் அனுமதி வழங்கி குன்னூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இன்று(சனிக்கிழமை) காவல் முடிவடையும் ரமேஷ், தனபால் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.