மழையால் வீடு இடிந்து விழுந்தது

கோத்தகிரி அருகே மழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் சிறுவன் உள்பட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2021-11-05 14:07 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே மழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் சிறுவன் உள்பட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விரிவாக்க பணி

கோத்தகிரி அருகே உள்ள காக்காசோலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 66). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(57). இவர்களது மகன் ஆனந்த ராஜ். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு தமிழ்கதிர்(4) என்ற மகன் இருக்கிறான். இவர்கள் 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அந்த வீட்டின் விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. முன்பக்கம் பணிகள் நடைபெறுவதால், பின்பக்கம் உள்ள 2 அறைகளில் தங்கினர். கடந்த 3-ந் தேதி இரவில் சுந்தரம், ராஜேஸ்வரி மற்றும் தமிழ்கதிர் ஆகியோர் ஒரு அறையிலும், ஆனந்தராஜ், சுமதி ஆகியோர் மற்றொரு அறையிலும் தூங்கினர். 

வீடு இடிந்தது

இதற்கிடையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் திடீரென சுந்தரம், ராஜேஸ்வரி, தமிழ்கதிர் ஆகியோர் தங்கி இருந்த அறையின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அவர்கள் 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்பட்டு இருந்த லேசான காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்