திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் யாகசாலையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் யாகசாலையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது

Update: 2021-11-05 12:57 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கந்தசஷ்டி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை ஆகியோருக்கு பிரதான 3 கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சிவன்-பார்வதி உள்பட பரிவாரமூர்த்தி கும்பங்களும் வைக்கப்பட்டு இருந்தது. காப்பு கட்டிய ஹரிகர சிவாச்சாரியார் தாம்பூலத்தை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோரிடம் பெற்று யாகசாலை பூஜையை தொடங்கினார்.
சிறப்பு தீபாராதனை
2-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்த பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் இருந்து தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பாக எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் கலையரங்கம் அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் பக்தர்களை அமர வைத்து சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுமதித்தனர். அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு முதலில் நேரடியாக வந்த 5 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். கோவில் கிரிபிரகாரத்தில் ஏராளமான  பெண்கள் அடிபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சில பக்தர்கள் கோவில் வளாகத்தில் குழுக்களாக அமர்ந்தும் முருக பெருமானின் திருப்புகழை பாடி வழிபட்டனர்.
9-ந் தேதி, சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது. 7-ம் திருநாளான 10-ந்தேதி (புதன்கிழமை) இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்