தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 97 பேர் கைது செய்யப்பட்டனர். மது போதையில் வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பட்டாசு
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது மக்கள் வழக்கம் போல் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அரசின் நேரக்கட்டுப்பாடுகளை கடந்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
கைது
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 97 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் மதுபோதையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 20 பேர் கைது செய்யப்பட்டு, 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.