கோணிப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

காங்கேயம் அருகே கோணிப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 ஆயிரம் கோணிப் பைகள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2021-11-05 11:58 GMT
காங்கேயம்,
காங்கேயம் அருகே கோணிப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 ஆயிரம் கோணிப் பைகள் தீயில் எரிந்து நாசமானது.
கோணிப்பை குடோன்
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கூத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சத்தியமூர்த்தி, சந்திரசேகர். இவர்களுக்கு காங்கேயம் அருகே, சென்னிமலை சாலையில் உள்ள சகாயபுரம் பகுதியில் கோணிச் சாக்கு இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இவர்களது கோணிப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்துள்ளது. பின்னர் தீயானது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. 
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக  குடோனின் உரிமையாளருக்கும், காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் ம.சுப்பிரமணியன் தலைமையில்  தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயினை அணைக்க போராடினர்.  சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். 
35 ஆயிரம் சாக்குப்பை எரிந்து நாசம்
இந்த தீ விபத்தில் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் சாக்குப் பைகள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் கிடங்கின் ஓடு வேய்ந்த மேற்கூரையும் முற்றிலும் எரிந்து சேதமானது.இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்