காலணியுடன் கோவிலுக்குள் சென்று வீடியோ பதிவிட்ட 4 பேர் கைது
காலணியுடன் கோவிலுக்குள் சென்று வீடியோ பதிவிட்ட 4 பேர் கைது
மங்களூரு: பெல்தங்கடி அருகே காலணியுடன் கோவிலுக்குள் சென்றதுடன் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட கேரளாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காலணியுடன் கோவிலுக்குள் சென்றனர்
தட்சிணகன்னடா மாவட்டம் பண்ட்வால் அருகே கரஞ்சிஈஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி கேரளா பதிவெண் கொண்ட காரில் வாலிபர்கள் 4 பேர் கரஞ்சிஈஸ்வரா கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் காலணிகளை அணிந்தபடி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்துக்களின் புனிததலமாக கருதும் கோவிலுக்குள் காலணி அணிந்து சென்ற வாலிபர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் 4 பேரையும் கைது செய்யும்படி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
4 பேர் கைது
இதையடுத்து சம்பவம் தொடர்பாக புஞ்சலகட்டே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சமூகவலைத்தளங்களில் வெளியான வீடியோ மூலம் கோவிலுக்குள் காலணியுடன் சென்றவர்கள் பற்றி துப்பு துலக்கினர்.
இந்த நிலையில் கோவிலுக்குள் காலணியுடன் சென்றவர்கள் கேரளாவை சேர்ந்த புஷ்கர் ரகுமான் (வயது 20), இஸ்மாயில் அர்கமஜ் (22), முகமது தனிஷ்க் (19), முகமது ரஷாத் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
விசாரணைக்கு பிறகு 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதானவர்கள் மீது வழிபாட்டு தலத்தை அசுத்தம் செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.