திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடி 40 நாட்களில் கிடைத்தது

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடி 40 நாட்களில் கிடைத்தது.

Update: 2021-11-04 20:24 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அப்படி வருகிற பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதோடு தங்களால் இயன்ற பணம், தங்க நகை, வெள்ளி நகைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்றது. இதற்காக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரத்து 343 வசூலாகி இருந்தது. மேலும் 435 கிராம் தங்கம், 5 கிலோ 350 கிராம் வெள்ளி நகைகள் காணிக்கையாக கிடைத்தன. இந்த காணிக்கை 40 நாட்களில் கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்