குடும்பத்தகராறில் மனைவி, குழந்தையை கொன்று தொழிலாளி தற்கொலை
குடும்பத்தகராறில் மனைவி, குழந்தையை கொன்று தொழிலாளி தற்கொலை
பெங்களூரு: கதக் அருகே மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு தொழிலாளியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தூக்கில் தொங்கிய 3 பேர்
கதக் மாவட்டம் கஜேந்திரகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகேந்திர கடா கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா கடாதா (வயது 30). இவரது முனைவி சுதா (24). இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. மல்லப்பா, சுதா தம்பதிக்கு 3 மாதங்களே ஆன ரூபாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. மல்லப்பா வசிக்கும் வீடு தோட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலையில் மல்லப்பாவின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்கள். அப்போது மல்லப்பா ஒரு அறையிலும், மற்றொரு அறையில் சுதாவும், குழந்தையும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். இதை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு
தகவல் அறிந்ததும் கஜேந்திரகடா போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் சுதாவும், குழந்தையும் தூக்கினார்கள், மற்றொரு அறையில் தான் மல்லப்பா பிணமாக தொங்கினார்.
இதனால் தனது மனைவி, குழந்தையை கொலை செய்துவிட்டு மல்லப்பாவும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாா் சந்தேகிக்கின்றனர். மேலும் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
அதே நேரத்தில் குடும்ப பிரச்சினையில் குழந்தையை கொன்றுவிட்டு சுதா தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதனால் மல்லப்பாவும் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், 3 பேரின் சாவு பற்றி சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கஜேந்திரகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.