ரூ.70 கோடி வரி ஏய்ப்பு செய்த பிரபல கட்டுமான நிறுவனம்

கர்நாடகாவில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2021-11-03 20:51 GMT
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டு உள்ளது.

வருமானவரி சோதனை

கர்நாடக மாநிலத்தில் வடபகுதியில் சாலை மற்றும் நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அதனடிப்படையில் கடந்த மாதம் 28-ந்தேதி இந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை ஆய்வு செய்தது. அப்போது, இந்த நிறுவனம், கட்டுமான பொருட்கள் வாங்குதல், தொழிலாளர் செலவுகள், துணை ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்தியது போன்றவற்றில் போலியான செலவுகளை செய்ததாக பதிவு செய்து அதன் லாபத்தை மறைத்ததும் சோதனையின் போது தெரியவந்தது. 
அத்தகைய செலவினங்களின் உண்மையான பட்டியல் அடங்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் உட்பட பல்வேறு புகார் அளிக்கக்கூடிய வகையிலான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருமானவரித்துறையால் கைப்பற்றப்பட்டன.

ரூ.70 கோடி வரி ஏய்ப்பு

அத்துடன் விற்பனையாளர்கள் மற்றும் பொருட்களை வழங்கியவர்களிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத பணம் நிறுவனத்தின் முக்கிய நபர்களால் பெறப்பட்டுள்ளதும் சோதனையில் தெரியவந்தது. 

இதுபோன்ற பரிவர்த்தனைகளில் இருந்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கணக்கில் காட்டப்படாத பணத்தை சம்பாதித்து வருவதும் தெரியவந்தது. இந்த சோதனையின் மூலம் ரூ.70 கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு செய்ததை நிறுவனத்தினர் ஒப்புக் கொண்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரடி வரிகள் வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்