காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு;
பென்னாகரம்:
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநிலம் குடகு மலை, உடுப்பி, இடுக்கி, சிக்மங்களூர், ஹாசான், உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களிலும் கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
14 ஆயிரம் கனஅடி
நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து திடீரென அதிகரிக்க தொடங்கியது. நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.