மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவர் பரிதாப சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.;
ஈரோடு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
ஈரோடு கொல்லம்பாளையம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் தேவ பிரசாந்த் (வயது 19). சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டார். தேவபிரசாந்த் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது அத்தை வீட்டிற்கு பால் வாங்க சென்றார்.
பின்னர் பால் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அலுச்சாம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக தேவபிரசாந்த்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் தேவ பிரசாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தேவபிரசாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதற்கிடையில் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றார்கள்.