தேவையற்ற உரங்களை மாற்றி வழங்கும் விற்பனையாளர் மீது நடவடிக்கை
ரசாயன உரங்களுடன் தேவையற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்தும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
விருதுநகர்,
ரசாயன உரங்களுடன் தேவையற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்தும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல், மக்காச்சோளம், சிறுதானிய பயிர்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் அடங்கிய குழுவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நரிக்குடி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உரப்பதுக்கல் உள்ளதா எனவும் இருப்பில் உள்ள உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், விற்பனையாளர் புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.
உரிமம் ரத்து
ஆதார்எண் கொண்டு உரம் மற்றும் வேளாண் இடு பொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும் விவசாயிகளுக்கு தங்களின் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள பரப்பிற்கு ஏற்றவாறு உரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதா எனவும் பி.ஓ.எஸ். எந்திரம் மூலம் உரம் வினியோகம் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மேற்படி ஆய்வில் அம்மோனியம் சல்பேட் என கூறி மக்னீசியம் சல்பேட் உரத்தை தவறாக விவசாயிகளுக்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 30 நாட்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் பயிர்களுக்கு தேவைக்கு அதிகமாக யூரியா உரத்தினை இடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவ்வாறு இடுவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு பூச்சி நோய் தாக்குதலுக்கு பயிர்ஆளாவதை தவிர்க்கும் பொருட்டு விவசாயிகளுக்கு உயிர்உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் மண்புழு உரங்கள் இயற்கை உரங்களையும் சேர்த்து பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ரசாயன உரங்களுடன் தேவையற்ற இதர உரங்களை வாங்க கட்டாயப்படுத்தவோ, ரசாயன உரங்களுடன் சேர்த்தோ வழங்கக்கூடாது. தேவை இல்லாத உரங்களை மாற்று உரமாக வழங்கும் விற்பனையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் உத்தண்ட ராமன் எச்சரித்துள்ளார்.