காவிரி ஆற்றில் மூழ்கி எல்.ஐ.சி.முகவர் சாவு

காவிரி ஆற்றில் மூழ்கி எல்.ஐ.சி.முகவர் சாவு

Update: 2021-11-03 18:37 GMT
திருச்சி, நவ.4-
காவிரி ஆற்றில் மூழ்கி எல்.ஐ.சி. முகவர் இறந்து போனார்.
எல்.ஐ.சி.முகவர்
திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). எல்.ஐ.சி. முகவரான இவர் நேற்று முன்தினம் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் பிணம்
 திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 60 வயதுடைய முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 திருச்சி சங்கிலியாண்டபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த அசாருதீன் (20) கடந்த செப்டம்பர் மாதம் கோவைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கே இருக்கிறார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இதுபற்றி அவருடைய தாயார் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
மாயம்
 திருச்சி பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்த சீனிவாசனின் மகள் ராகவி (21) திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து ராகவி மாயமானார். இதுகுறித்து அவருடைய தாத்தா கணேசன் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
350 நாட்கள் சிறை தண்டனை
 போலீசாரிடம் எழுதி கொடுத்த நன்னடத்தை உறுதிமொழியை மீறியதால் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடிகளான ஹரிகரசுதன், வீரமணி ஆகியோருக்கு 350 நாட்கள் சிறைதண்டனை விதித்து நிர்வாக செயல்துறை நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் கரூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்