வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்; தந்தை, மகன் பலி

தேனி அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியாகினர்.

Update: 2021-11-03 17:50 GMT
தேனி : 

தீபாவளி கொண்டாட...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்த வீரராஜ் மகன் மணி (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு விபுசன் என்ற 3 வயது மகன் இருந்தான்.
மணி தனது மனைவி மற்றும் மகனுடன் திருப்பூரில் வசித்து வந்தார். சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஆசையில் நேற்று திருப்பூரில் இருந்து அவர் தனது மனைவி, மகனுடன் அனுமந்தன்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

தந்தை, மகன் பலி
நேற்று மாலையில் தேனியை அடுத்த ஆதிப்பட்டி புறவழிச்சாலையில் சென்ற போது அந்த சாலையில் ஒரு மினிவேன் நின்று கொண்டு இருந்தது. எதிர்பாராத விதமாக அந்த மினிவேன் மீது மணி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இதில் மணி, விபுசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக மினிவேனை அஜாக்கிரதையாக சாலையில் நிறுத்தி வைத்திருந்த கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த சந்துரு (21) மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஊருக்கு சென்ற போது விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அனுமந்தன்பட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்