அரியலூர்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 100 அடி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து வருகின்றனர். ஆனால் மீன்சுருட்டி கடைவீதிகளில் இருபுறமும் 75 அடி மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க போதுமான இடம் இல்லாததால் வடிகால் வாய்க்கால் அமைக்காமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீப நாட்களாக பெய்து வரும் மழையால் மழைநீர் வடிய வசதி இல்லாததால் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும், தீபாவளி கொண்டாடும் நேரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் வடிய வழி இல்லாததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதேபோல, பஸ் நிறுத்தம் அருகே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். தரைக்கடை பகுதியில் குளம்போல மழைநீர் சூழ்ந்து இருந்தது. ஆகவே, நான்கு வழிச்சாலை அமைக்கும் இந்த சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.