தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கரூர் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுவதால் கரூர் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-11-03 17:29 GMT
கரூர், 
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடை அணிந்து, இனிப்பு, பலகாரங்களை சாமிக்கு படையல் செய்து வழிபாடு நடத்தி பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இதனால் ஜவுளி மற்றும் இனிப்பு பலகாரங்கள், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் நேற்று கடைவீதிகளில் குவிந்தனர்.
கரூரில் நேற்று காலை சுமார் 10 மணி வரை தூறல் மழை பெய்தது. இதனால் கடைவீதிகளில் பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. பின்னர் 10 மணிக்கு மேல் பொதுமக்கள் கடைவீதிகளில் குவிய ஆரம்பித்தனர். இதனால் ஜவகர்பஜார் பகுதியில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலையாக தென்பட்டது. ஜவுளி கடைகள், ஸ்வீட்ஸ் கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. தரைக்கடைகளிலும் கூட்டம் நிரம்பியது.
போக்குவரத்து நெரிசல்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கடை பகுதிகள், கோவை சாலை, பிரம்மதீர்த்தம் சாலை பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர். திருவள்ளுவர் மைதானத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் கரூர் நகரத்தில் நேற்று காலை முதல் இரவு வரை வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக மனோகரா கார்னர், கோவை சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, திருச்சி ரோடு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
கரூரில் ஜவகர்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நகரின் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. மேலும் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.
உழவர் சந்தையில் ரூ.5½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
தீபாவளி பண்டிகை அமாவாசை தினத்தில் வருவதால் பலர் வீடுகளில் இறைச்சி வாங்கமாட்டார்கள். சைவ உணவுகளையே சமைப்பது உண்டு. இதனால் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கவும் மக்கள் நேற்று அதிகளவில் வந்திருந்தனர். தீபாவளியையொட்டி கரூர் உழவர் சந்தை நேற்று மதியம் 12 மணி வரை செயல்பட்டது. 
உழவர்சந்தைக்கு காய்கறி வரத்து 15.71 மெட்ரிக் டன்னாக இருந்தது. மேலும், ரூ.5 லட்சத்து 61 ஆயிரத்திற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. உழவர் சந்தைக்கு 105 விவசாயிகளும், 3 ஆயிரத்து 145 பொதுமக்களும் வருகை புரிந்திருந்தனர்.
பஸ்நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊர் சென்றவர்களால் கரூர் பஸ் நிலையத்தில் நேற்றும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கரூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப் பட்டன.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஜோர்
பொதுவாக பண்டிகை காலங்களில் ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும், மதுபிரியர்களின் கூட்டமும் அலைமோதியது.

மேலும் செய்திகள்