வேன் மோதி 2 மூதாட்டிகள் பலி

அரவக்குறிச்சி அருகே வேன் மோதி 2 மூதாட்டிகள் பலியானார்கள். மேலும், தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-03 17:08 GMT
அரவக்குறிச்சி, 
அரவக்குறிச்சி அருகே வேன் மோதி 2 மூதாட்டிகள் பலியானார்கள். மேலும், தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வேன் மோதியது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கொடையூர் கக்கராம்பட்டியை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70), புத்தாம்பூர் ஆறு ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி (65). இவர்கள் 2 பேரும் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி வீடுகளில் விற்பனை செய்வது வழக்கம்.
நேற்று காலை கரூர் உழவர் சந்தைக்கு செல்ல வேண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆறு ரோடு அருகே பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. மேலும், சாலையோரம் நின்று கொண்டிருந்த பெரியம்மாள், லட்சுமி ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது.
2 மூதாட்டிகள் பலி
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதனால் பீதியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான பெரியம்மாள், லட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்