புத்தாடை, பட்டாசு வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளியை பண்டிகையை கொண்டாட புத்தாடை, பட்டாசுவாங்க விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையிலும் அவர்கள் குடைபிடித்தபடி சென்றனர்.

Update: 2021-11-03 16:35 GMT
விழுப்புரம், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்கூட்டியே தயாராகி கடந்த சில நாட்களாக புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளுக்கு திரண்டு சென்றனர். நேற்று காலை 8 மணி முதலே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம் நகரை பொறுத்தவரை ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் நிறைந்த நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, திருச்சி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். அவ்வப்போது விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டே இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல்
பொதுமக்கள் குடைபிடித்தபடி சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் பூஜை பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றதை காண முடிந்தது.
இதேபோல் திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி சேலம் சாலை, கச்சேரி சாலை, நான்குமுனை சந்திப்பு, துருகம் சாலை, மந்தைவெளி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு, காய்கறி பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் நேற்று திரண்டனர். இதனால் கள்ளக்குறிச்சி நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொட்டும் மழையிலும் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி கடைவீதிகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், தியாகதுருகம் கடைவீதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு சில இடங்களில் பெய்த மழையால் சற்று கூட்டம் குறைந்ததோடு, வியாபாரமும் பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவுப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

மேலும் செய்திகள்