கல்வீசி 5 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
விழுப்புரம், செஞ்சி பகுதியில் கல்வீசி 5 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
மரகதபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் ஒன்று விழுப்புரத்திற்கு புறப்பட்டது. மரகதபுரத்திற்கும்- கண்டம்பாக்கத்திற்கும் இடையே உள்ள பாலத்தில் வரும்போது திடீரென யாரோ மர்ம நபர்கள், அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. இதேபோல் திருச்சியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கிச்சென்ற அரசு பஸ் நேற்று காலை விழுப்புரம் அருகே சிந்தாமணி என்ற இடத்தில் வரும்போது யாரோ மர்ம நபர், முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அந்த வழியாக சென்னையில் இருந்து விழுப்புரம் வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் வலதுபுற பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து பஸ் டிரைவர்கள் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பஸ் கண்ணாடியை உடைத்ததாக விழுப்புரம் அருகே வடகுச்சிப்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து சிறுகிராமம் நோக்கிச்சென்ற அரசு டவுன் பஸ் ஆலாத்தூர் மலட்டாற்று பாலம் அருகே சென்றபோது யாரோ மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி
செஞ்சி அடுத்த ஊரணித்தாங்கள் அருகே சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கல் வீசி பஸ் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.