இரும்பு வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது

இரும்பு வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது

Update: 2021-11-03 16:06 GMT
கணபதி

கோவை கணபதி அருகே இரும்பு வியாபாரி வீட்டில் கொள்ளை யடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 105 பவுன் நகை மீட்கப்பட்டது. 

105 பவுன் நகை கொள்ளை 

கோவை கணபதி அருகே உள்ள மணியகாரம்பாளையம் வேலவன் நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 44), இரும்பு வியாபாரி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி தினகரன், தனது குடும்பத்துடன் திருச்செந் தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பினார். 

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 105 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை 

இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். உதவி கமிஷனர் அருண் மேற் பார்வையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரத் குமார், தலைமை காவலர்கள் ராஜேந்திரன், நந்தகுமார், செந்தில்குமார், தினேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். 

அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதி வான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மாங்குடியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 28), மதுரையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28) என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. 

வாலிபர் கைது 

தொடர் விசாரணையில் கொள்ளையடித்த நகையை பிரேம்குமாரின் உறவினர் செல்லப்பாண்டிக்கு சொந்தமான நிறுவனத்தில் பதுக்கி வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நகையை எடுக்க வந்த பிரேம்குமாரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

 அவரிடம் இருந்து 105 பவுன் நகை மீட்கப்பட்டது.  மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் தமிழ்ச்செல்வனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்