102 வயது மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுபட்டா மாற்ற உத்தரவு நகலை வழங்கிய கலெக்டர்

கடத்தூரில், பட்டா மாற்ற சிறப்பு முகாம்

Update: 2021-11-03 15:58 GMT
சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா கடத்தூர் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கினார். தேர்தல் தனி தாசில்தார் மணி, சின்னசேலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு வரவேற்றார். மாவட்ட வழங்கல்  அலுவலரும், முகாம் கண்காணிப்பு அலுவலருமான சிவக்கொழுந்து முகாமை தொடங்கி வைத்து 50-க்கும் மேற்பட்டவர்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது ஆய்வுக்கு வந்த கலெக்டர் ஸ்ரீதர், கடத்தூரில் வீடுகட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 102 வயதான முத்தாலம்மாள் கொடுத்த மனு மீது விசாரித்து, உடனடியாக தீர்வு கண்டதோடு, முத்தாலம்மாளின் வீட்டுக்கே நேரில் சென்று, பட்டா மாற்ற உத்தரவுக்கான நகலை அந்த மூதாட்டியிடம் வழங்கினார். அப்போது  கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், வருவாய்த்துறை உதவியாளர்கள் சுமதி, உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் நாகராஜ், ஜெயபால் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனா்.

மேலும் செய்திகள்