திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியில் 717 பண்ணைகுட்டை அமைக்கும் பணி. கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியில் 717 தனிநபர் பண்ணைகுட்டை அமைக்கும் பணி நடக்கிறது. இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியில் 717 தனிநபர் பண்ணைகுட்டை அமைக்கும் பணி நடக்கிறது. இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
பண்ணை குட்டை அமைக்கும் பணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனிநபர் பண்ணை குட்டை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் ஒன்றியத்தில் 169 விவசாயிகளுக்கும், ஆலங்காயம் ஒன்றியத்தில் 81 விவசாயிகளுக்கும், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 116 விவசாயிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கந்திலி ஒன்றியத்தில் 129 விவசாயிகளுக்கும், மாதனூர் ஒன்றியத்தில் 124 விவசாயிகளுக்கும், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 98 விவசாயிகளுக்கும் என மொத்தம் 717 விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 717 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 97 லட்சம் வழங்கப்படவுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் தனிநபர் பண்ணைக்குட்டை பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவித் திட்ட அலுவலர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மாரி இளையராஜா, துணை தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் உடநிருந்தனர்.